Society for Conservation of Nature

Interesting life history of Cicada.

சில் வண்டுகளின் (Cicada)  வியத்தகு  வாழ்க்கைமுறை.

அண்மையில் நாங்கள் கொடைக்கானலில் உள்ள (Bombay Shola Reserved Forest) பாம்பே சோலா காப்புக்காட்டைப்  பார்வை இட்டபோது, அங்கே ஒரு மரத்தில் ஒட்டியிருந்த நூற்றுக்கணக்கான பூச்சிகளின் உயிரற்ற கூடுகள் அல்லது ஓடுகள் என்னுடைய கவனத்தை மிகவும் ஈர்த்தன. அவை  என்ன என்பது பற்றி ஆய்வு செய்தபோது, அவை (Adult Cicada) முதிர்ச்சி அடைந்த சில்வண்டுகள் தம் தோலை உரித்துக்கொண்டு (molting or shedding the skin) வெளியே வந்தபின், விடப்பட்ட கூடுகள் அல்லது ஓடுகள் (exoskeleton) என்பது தெரிய வந்தது.

 

Silvandu

ஒரு மரத்தில் காணப்பட்ட சில்வண்டுகளின் கூடுகள் அல்லது ஓடுகள் (exoskeleton) Photo by V.Sundararaju.

 

S.Vandu

 

முதிர்ந்த சில்வண்டு தோலுரித்து வெளிவந்தபின் உள்ள கூடு அல்லது ஓடு (exoskeleton) Photo by V.Sundararaju.

சில்வண்டுகள் Cicadidae விலங்கினக் குடும்பத்தைச் சேர்ந்தவை. உலகெங்கும் சுமார் 2500 வகையான சில்வண்டுகள் இருப்பதாகச் சொல்லப்படுகின்றது. சில் வண்டுகள் சுமார் 5 செ.மீ நீளம் வரை வளரக்கூடியவை. சில்வண்டுகளின் தலையில் அமைந்திருக்கும் அதன் கண்கள் பிரதானமாகத் தோன்றும். கண்ணாடி போன்று ஒளிபுகும் தோற்றம் உடைய நன்கு வளர்ச்சி அடைந்த அதன் இறகுகளின் ஊடே நரம்புகள் (இரத்தக் குழாய்கள்) பரவி இருக்கும். சில்வண்டுகளைப் பொதுவாக வெட்டுக்கிளி என்று பலரும் தவறாக நினைப்பதுண்டு. இவை மனிதருக்கோ அல்லது பிற தாவரங்களுக்கோ தீங்கு ஏதும் விளைவிப்பதில்லை.

சில்வண்டுகள் ஒருவித இசையோடு கூடிய ஒலியை எழுப்புவதை கலை உணர்வு மிக்கவர்கள் மிகவும் ரசிப்பார்கள்.  இவ்வகை சில்வண்டுகள் இல்லாமல் எவ்வித சப்தமும் இன்றி விளங்கியதால்தான் கேரள மாநிலத்தில் உள்ள ‘அமைதிப் பள்ளத்தாக்கு’ அத்தகைய பெயரையே பெற்றது என்பார்கள். ஆனால் இன்றோ இந்த வகை சில்வண்டுகள் அந்த அமைதிப் பள்ளத்தாக்கிலும் தம்முடைய இசைக்கச்சேரியைத் துவங்கிவிட்டன என்பதே விஞ்ஞானிகளின் கூற்று. அது உண்மையும் கூட. 2010 ஆம் ஆண்டு அமைதிப் பள்ளத்தாக்கிற்கு நாங்கள் சென்றிருந்த போது இந்த உண்மையை உணர்ந்தோம். அவை எழுப்பும் ஒலியின் அளவு சமயங்களில் சுமார் 100 டெசிபெல் வரை இருக்கும் என்று சொல்லப்படுகின்றது. இவை ஒவ்வொரு ஆண்டும் பூமியிலிருந்து வெளியே வருகின்றன. பொதுவாக சில வகை சில்வண்டுகள்  2 முதல் 5 ஆண்டுகள் கழித்தும், சில வகை 13 அல்லது 17 ஆண்டுகள் கழித்தும் முதிர்ச்சி அடைந்து, பின் பூமியிலிருந்து வெளி வரும். அப்படி வரும்போது அவை லட்சக்கணக்கில் இருக்கும். இவற்றின் எண்ணிக்கை மிக அதிகமாக இருப்பதால் பறவைகள், குளவி, அணில் மற்றும் நரிகளால் இவை கொல்லப்பட்டாலும், சில்வண்டுகளின் இனத்திற்கு அதனால் எவ்வித அச்சுறுத்தலும் ஏற்படவில்லை.

சில்வண்டுகள் பூமியிலிருந்து மேலே வந்தவுடன், ஆண் மற்றும் பெண் வண்டுகள் இணை சேர, பெண் வண்டுகள் மரக்கிளைகளின் ஓரங்களில் நூற்றுக்கணக்கான முட்டைகளை இடும். முட்டைகளிலிருந்து  இளம் வண்டுகள் வெளிவந்ததும், அவை மரங்களிலிருந்து கீழே ஊர்ந்து தரையை அடைந்து மரங்களின் வேரில் உள்ள சாற்றை உறிஞ்சி உணவாகக்கொள்ளும்.

சில்வண்டுகள் வாழ்வின் பெரும்பாலான ஆண்டுகளை பூமிக்கு அடியிலேயே செலவிடுவதால் அவற்றின் வாழ்க்கை முறைகளைப் பற்றி விரிவாக அறிய இயலவில்லை. ஆனால், உணவுக்காக அங்கே கடும் போட்டி நிலவும் என்பது மட்டும் ஓரளவிற்குத் தெளிவாகின்றது.

சில்வண்டுகள் மனிதர்களுக்கு எவ்வித இடையூறும் செய்வதில்லை.

ஏப்ரல் முதல் மே மாதங்களில் சுமார் 6 வாரங்கள் மட்டுமே இந்த சில்வண்டுகள் பூமியிலிருந்து மேலே வந்து இனப்பெருக்கம் செய்கின்றன. சில்வண்டுகளை சீனா, மலேசியா, பர்மா, இலத்தீன் அமெரிக்கா, காங்கோ ஆகிய நாடுகளில் உள்ளவர்கள் உணவாகவும் உட்கொள்கின்றனர். இவற்றின் ஓடுகள் (அதாவது தோல் உரிக்கப்பட்ட அதன் கூடுகள்) சீனாவில் பரம்பரை மருத்துவத்திற்குப் பயன்படுத்தப்படுகின்றன.

பொதுவாக ஆண் சில்வண்டுகள் மட்டுமே ஒலி எழுப்புகின்றன. பென்சில்வண்டுகளைக் கவர்வதற்காகவும், பிற சில்வண்டுகளை எச்சரிப்பதற்காகவும் இவ்வித அழைப்புகள் விடுக்கப்படுகின்றன.

சில்வண்டுகள் பூமிக்கு அடியில் சுமார் 30 செ.மீ முதல் 2.5 மீட்டர் வரை ஆழத்தில் வசிக்கும். அவை பூமிக்கு அடியில் ஒரு பாதையை அமைத்து அதன் வழியாக பூமியிலிருந்து மேலே வருகின்றன. மேலே வந்த சில்வண்டுகள் மரங்களில் ஏறி, பின் அவற்றின் உடல்பகுதியின் மேல் தோலை உரித்துக் கொண்டு முதிர்ச்சி அடைந்த வண்டினங்கள் வெளிவருகின்றன. மரங்களில் அவற்றின் தோலுரித்த உடல்பகுதியின் ஓடுகளை எப்பொழுதும் காணலாம்.

இணை சேர்ந்தபின் பெண் சில்வண்டுகள் மரக்கிளைகளின் பட்டையில் துளை உண்டாக்கி அதில் முட்டைகளை இடும். மீண்டும் மீண்டும் அவை நூற்றுக்கணக்கான முட்டைகளை இடும்.  முட்டைகளிலிருந்து வெளி வரும் இளம் வண்டுகள் மண்ணிற்குள் சென்று 2 முதல் 5 ஆண்டுகள் வரை அங்கே வசிக்கும். சில சில்வண்டுகள் 13 ஆண்டுகளும், சில வண்டுகள் 17 ஆண்டுகளும் பூமிக்குள்ளே வசிக்கும்.

சில்வண்டுகள் சீன நாட்டுக்  கவிதைகளிலும், நாவல்களிலும் மிகச் சிறந்த இடத்தைப் பெற்று விளங்குகின்றன. அதே போன்று, ஜப்பானியத் திரைப் படங்களில் சில்வண்டுகள் எழுப்பும் இசையைக் கொண்டு ஒரு நிகழ்வு கோடைகாலத்தில் நடைபெறுவதாகக் காட்டுகின்றனர். ஜப்பானில், கோடைகாலத்தில் சில்வண்டுகளையும், அவற்றின் ஓடுகளையும் ( அதாவது முதிர்ச்சி அடைந்த சில்வண்டு அதன் தோலை உரித்துக்கொண்டு வெளியே வந்தவுடன் மீந்த அதன் கூடு அல்லது ஓடு) சேகரம் செய்வது சிறார்களின் பொழுதுபோக்காகும்.